×

‘சென்னை தி.நகரில் பணியாற்றியவர்’ அரசு பள்ளியில் மகனை சேர்த்த குமரி எஸ்.பி. - சமூக வலைதளங்களில் பாராட்டு மழை

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன், கோவைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு கடந்த இரு நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் வந்திருந்த எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், தான் எஸ்.பி.யாக பொறுப்பேற்றவுடன், தனது தாய், தந்தைக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தினார்.

பெற்றோரின் தியாகத்தால் தான், என்னால் சாதிக்க முடிந்தது. அவர்களுக்கு மரியாதை செலுத்துவது தான் எனது முதல் பணியாக இருக்கும் என்றார்.
இந்த நிலையில் தனது மகன் நிஸ்ரிக்கை, நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் சேர்த்துள்ளார். நேற்று தனது மகனை, மனைவி மற்றும் பெற்றோருடன் வந்து பள்ளியில் சேர்த்தார். முதல் வகுப்பு சேர்ந்துள்ள நிஸ்ரிக், வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியாக இருந்தான்.

மாவட்டத்தின் உயர் அதிகாரிகளான கலெக்டர், எஸ்.பி.யாக வருபவர்கள், தங்களது குழந்தைகளை அந்த மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதற்கு மாற்றாக தனது மகனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசு பள்ளியில் சேர்த்து இருப்பது பெரும் பாராட்டுக்குரியதாக மாறி உள்ளது. இது போன்ற உயர் அதிகாரிகள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் போது சாமான்ய மக்களும், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தில் இருந்து வெளி வருவார்கள்.

எஸ்.பி.யின் இந்த நடவடிக்கையால் அரசு பள்ளிகளை நோக்கி அதிகாரிகளின் பார்வை திரும்பும் என்று சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags : Chennai Di. Kumari S. , Kumari S.P., who enrolled her son in a government school, worked in Chennai. - A shower of praise on social websites
× RELATED வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்...